ஆன்மீகம்

               அஷ்டமி, நவமி திதிகளில் தொட்டது துலங்காது என முன்னோர்கள் கூறுவர். அஷ்டமி, நவமி திதிகளில் மேற்கொள்ளும் காரியங்கள் விரைவில் முடிவுக்கு வராது; தொடர்ந்து கொண்டே போகும் என்பதாலேயே அப்படிக் கூறினர்.

                   கோகுல அஷ்டமி திதியில் கிருஷ்ணர் அவதரித்தது அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் அந்தத் திதியில் பிறந்த காரணத்தால் அவர் எத்தனை கஷ்டங்களை அனுபவித்தார். அவதார புருஷன் என்பதால் அவற்றை சமாளித்தார்; இறுதியில் வெற்றி பெற்றார்.

               இதேபோல் நவமியில் பிறந்த ராமர், அரியணை ஏற்கும் நேரத்தில் மறஉடை தரித்து காட்டிற்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. சீதையை பிரிந்து அவர் பட்ட துயரங்கள் எல்லாம் நவமி திதியில் அவர் பிறந்த காரணத்தால்தான் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

               எனவேதான் நவமி, அஷ்டமி திதிகளில் சுப காரியங்கள் (திருமணம், கிரஹப் பிரவேசம், சொத்து வாங்குதல் உள்ளிட்டவை) மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். ஆனால் இந்தத் திதிகள் தெய்வீக காரியங்களுக்கு (தீட்சை பெறுவது, மந்திரங்கள் ஜெபிப்பது, ஹோமங்கள் உள்ளிட்டவை) உகந்தவை என்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

              செங்கல் சூலைக்கு நெருப்பு மூட்ட, எதிரிகள் மீது வழக்கு தொடுக்க, ஆயுதங்கள் பிரயோகிக்க, எதிரி நாட்டின் மீது போர் தொடுப்பது போன்ற செயல்களுக்கு அஷ்டமி, நவமி திதிகள் ஏற்றவையாகும்.

              ஸ்ரீ இராம பிரான் அவதரித்த புண்ணிய நாளை ஸ்ரீ இராம நவமியாகக் கொண்டாடி வருகிறோம்.

             பங்குனி மாதம், வளர்பிறை நவமியும் புனர் பூச நட்சத்திரமும் சேர்ந்திருக்கும் நாளே ஸ்ரீ இராமர் அவதார தினம். சில வருடங்களில் இந்த நன்னாள் சித்திரை மாதத்தில் அமைவதும் உண்டு.

               இராம நவமியன்று வைஷ்ணவ ஆலயங்களில் ஸ்ரீ இராமருக்கு பட்டாபிஷேக விழா சிறப்பாக நடைபெறும். வீடுகளில் ஸ்ரீ இராமர் பட்டாபிஷேகப் படத்தை வைத்துப் பூஜை செய்து, வடை, பருப்பு, நீர் மோர், பானகம், பாயாசம் நிவேதனம் செய்து வழிபடுவார்கள். ஸ்ரீ இராமர் படம் அல்லது விக்ரகத்துடன் இராமாயணப் புத்தகத்தையும் வைத்துப் பூஜிப்பார்கள்.

                ஸ்ரீ இராம நவமியன்று ராமநாமம் சொல்வதும், இராமநாமம் எழுதுவதும் நற்பலனைத் தரும். பகவான் நாமம் இதயத்தைத் தூய்மைப்படுத்தி உலக ஆசைகள் என்னும் தீயை அணைக்கிறது. இறை ஞானத்தைத் தூண்டுகிறது. அறியாமை, காமம், தீய இயல்புகளைச் சுட்டுப் பொசுக்குகிறது. உணர்ந்தோ உணராமலோ உச்சரித்தாலே பகவான் அருள் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

நன்மையுஞ் செல்வமும்
நாறு நல்குமே,
தின்மையும் பாவமுஞ்
சிதைந்து தேயுமே,
சென்மமு மரணமு
இன்றித் தீருமே,
இம்மையே இராமா
வென்றிரண்டு எழுத்தினால்'' கம்பர்


பார்வதி பரமனிடம் கேட்கின்றாள் "பிரபோ!
இந்தக் கலியுகத்தில் மக்கள் உய்ய எளிய வழியைக் கூற வேண்டும்.''
ஈஸ்வரன் பரம கருணையுடன் பார்வதிக்குக் கூறிய
அந்த மகா மந்திரமே "ராம'' மந்திரமாகும்.

"ஸ்ரீ ராம ராமேதி
ரமே ரமே மனோரமே
சகஸ்ர நாம தத்துல்யம்
ராம நாம வரானனே''
 

உங்கள் மொழியில் கருத்துரைக்க...Give Ur Comments in Ur Language